திருக்குறளில் பிணி ’ –பொருட்பன்மை

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

விளம்புகின்ற அறத்தால் சிறப்புறுவது போலவே மொழியமைப்பு / நடைச் சிறப்பு ஆகியவற்றாலும் திருக்குறள் மிளிர்கின்றது. பழந்தமிழ்ச் சொற்களைச் செவ்வனே ஆண்டும் புதுக்கியும் வள்ளுவம் வழங்குகின்றது. இம் முறையில் பிணி என்னும் பல்பொருட்சொல்லைப் பெயராகவும் வினையாகவும் திருக்குறள் ஆளுமாற்றை எடுத்துரைப்பதாக இக் குறிப்புரை இயல்கின்றது.

மனித வாழ்க்கையில் உடல்நலம் முதன்மையாகி, மானுட இயக்கத்திற்கும் அடிப்படையாகின்றது. இதில் நலிவு ஏற்படும்போது பிணி / நோய் உண்டாகின்றது. இதோடு உள்ளத்தில் பிணி ஏற்படுவதும் உண்டு.  வள்ளுவத்தில் கீழ்வருமாறு பிணி பெயராகப் பயில்கின்றது:

குறட்பா எண்

பொருள்

227

 பசியால் உண்டாகின்ற நலிவு

734

 தொற்று நோய்

738

தொற்று நோய்

949

தொற்று நோய்

1014

 எண்ண மாறுபாடு

1102

தொற்று நோய்

 

மேற்படி அட்டவணையால் தொற்று நோய் என்னும் பொதுப் பொருளோடு பசியையும் வெறுப்பையும் எரிச்சலையும் வள்ளுவம் பிணியாகச் சுட்டுவது அறியலாகின்றது. 1014ஆம் குறட்பா  (psychosomatic illnesses- மனஞ் சார்ந்த நோய்) என்னும் நோயியல் கருத்தில் இயல்கின்றது. பிணியைக் குறிக்க நோய் என்னும் பெயர்ச்சொல்லையும் வள்ளுவம் ஆண்டுள்ளது.

அடுத்து , வினையாக இணைத்தல் என்னும் பொருளில்,

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை (570)

என்னும் குறட்பாவில் பிணித்தல் என்பதன் வினைடியாகத் தோன்றிய பெயரெச்சமாக நட்பாடல் / சேர்த்தல் என்றும்,

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் (643)

என்னும் குறளில் அவ்வாறே உடன்படுத்துதல் / தன்வயமாக்கல் என்னும் கருத்திலும் திருவள்ளுவர் இதை நுட்பமாக ஆண்டுள்ளார்.

            இங்ஙனம் பெயராகவும் பெயரெச்சமாகவும் இயல்கின்ற பிணியை உணர்ந்து தெளிந்தால் வள்ளுவத்தின் குரலை உணரலாம்.; புரிதிறன் சிறக்கும்.

நன்றி: இணையத் தரவுகள்        ********

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு