சிந்தாமணியில் நம்பன், நம்பி என்னும் சொற்கள் உணர்த்துகின்ற இளைஞர் வளம்
புதுவை
குழந்தைசாமி,
புதுச்சேரி
முதன்மைச்
சொற்கள்: இளைஞர்
வளம்,
நிலைபேறுடைய
மானுட மதிப்புகள்,
சீவகன், விமலை, உதயணன், யூகி.
“இளைஞர்களே, எழுந்து
நில்லுங்கள். தோல்வியில் துவண்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் சமுதாயத்தை
வலிமையான கைகளால் மாற்றியமைப்போம். பலவீனமாக இருக்கிறோமே என வருத்தப்படாதீர்கள்.
பயந்துகொண்டே வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை. பயத்திற்கு மாற்று, வலிமையைக் குறித்து எண்ணுவது தான். அளவற்ற தன்னம்பிக்கை அச்சத்தை
விரட்டிவிடும். முழு வேகத்துடன் செயலாற்றினால் வெற்றி இலக்கை விரைவில்
அடையமுடியும். என்னோடு வாருங்கள். உங்களுக்குத் தோள்கொடுக்க நான் இருக்கிறேன்” என்று
இளைஞர்களுக்குத் தன் வீரக்குரலால் அழைப்புவிடுத்தவர் வீரத்துறவி விவேகானந்தர். இவரைப் போலவே இலக்கியப் படைப்பாளர்கள் வெளிப்படையாகவும்
குறிப்பாகவும் இளைஞர் நலன்,
இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் குறித்துக் குரல்கொடுத்துள்ளனர். தொல்காப்பியப் பொருளதிகாரமும் திணைப் பாடல்களும் இளைஞர்களை அறிவுத் திறமையும்
பொறுப்புணர்வும் பெற்றவர்களாகப்
படைத்துக்காட்டுகின்றன. அற இலக்கியங்கள் இளைஞர் மேம்பாட்டிற்கான
விழுமியங்களை வகுத்துரைக்கின்றன. காப்பியங்கள் தன்னிகரிலாத்
தலைவனைப் படைத்து இளைஞர் மேம்பாட்டுக்கு வழிகாட்டுவனவாகத் திகழ்கின்றன. இவை கொள்கையாக்கக் கொள்நெறிகளாக
விளங்குகின்றன. கதைத் தலைவனிடமிருந்து செய்யவேண்டியவற்றையும்
, எதிர்நிலைத் தலைவனிடமிருந்து செய்யத்தகாதவற்றையும்
தெளியலாம். அம்
முறையில் தழுவல் பெருங்காப்பியமான சீவகசிந்தாமணி வகுத்துரைக்கின்ற இளைஞர் நலக்
கருத்துகளை, நம்பன்; நம்பி என்கின்ற
சொல்லாய்வுவழி எடுத்துரைப்பதாக இக் கட்டுரை இயல்கின்றது.
நம்பன்
/
நம்பி :
விக்சனரி என்னும் இணைய அகரமுதலி,( https://ta.wiktionary.org/s/1ro0) நம்பன் /
நம்பி ஆகிய பெயர்ச்சொற்கட்கு.
ஆண்களில் சிறந்தோன் ;கடவுள் :
சிவன் ஆகிய பொருளையும்,
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி.( ஐந்தாம் மடல்; முதல் பாகம், பக்.166-167 )
அனைவராலும்
நம்பிப் போற்றப்படுபவன்/ஆணிற் சிறந்தோன்
என்றும் குறிக்கின்றன. இவற்றால்
நம்பன்/ நம்பி ஆகியன நற்பண்புகளும் திறன்களும் நிறைந்த
இளைஞரைச் சுட்டுவதை அறியலாம்.
இளைய
பாரதம்:
பழம்பெரும்
நாடான பாரதத்தின் மக்கள் தொகையில், முப்பது
வயதுக்குட்பட்ட இளைஞர்கள்
மூன்றில் ஒரு பங்கினர்; அதனால் இந்தியாவை இளமை நாடு என்றும் கூறலாம்.
கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் மைய அரசிலும் மாநில
அரசிலும் கல்வி, இளைஞர் நலன், திறன் மேம்பாடு,
விளையாட்டு ஆகிய அமைச்சகங்கள் நாட்டுநலப்பணித் திட்டம் போன்ற இளைஞர்
மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றனர். இன்றைய இளைஞர்கள்
நாளைய தலைவர்கள்; எதிர்கால உலக நலன் இன்றைய இளைஞர்களை மையமிட்டதாக
உள்ளது. அதனால் காலந்தோறும் இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதோடு,
இலக்கியங்கள் இயம்புகின்ற நிலைபேறுடைய மானுட மதிப்புகளில் ஒன்றாகவும்
இளைஞர் மேம்பாடு திகழ்கின்றது.
புறநானூற்றில் 311ஆம் பாடலில் சால்புடையோன் என்று அவ்வையார்
இளம் வீரனைச் சுட்டுவதும் ,312ஆம் பாடலின்
05,06ஆம் அடிகளில்,
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே
என்று
பொன்முடியார் வலியுறுத்துவதும் இவண் கருதத்தக்கன. பல பாடல்களிலும் இத்தகைய கருத்துகள்
விரவிக் கிடக்கின்றன.
சிலப்பதிகாரத்தில் மாதவியின் கலைத்திறன், கண்ணகியின்
வழக்காடு திறன், ஆய்ச்சியரின் விருந்தோம்பல் பண்பு ஆகியன எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
மணிமேகலையின் மன உறுதி, தவ நெறி, பசித் துன்பம் போக்குகின்ற ஈகைத் திறன் போன்றவை இங்கு நோக்கத்தக்கன.
பெருங்கதையில் உதயணன் அழகனாக, அறிவாளியாக,
வீரனாக, இசைவாணனாக, ஆட்சியாளனாகப் படைக்கப்பட,
இவனுக்கு இணையான ஆளுமை மிக்கவனாக நண்பன் யூகியும் இயல்கின்றான்.
சீவகசிந்தாமணி சமணக் காப்பியமாதலின் ஆளுமை வளர்ச்சியை ஊக்கப்படுத்துகின்றது.
அதனால் காப்பியத் தலைவனான சீவகன் பன்முகத் திறமைகளும் ஒருங்கே வாய்ந்தவனாகப்
படைக்கப்பட்டு, முன்மாதிரி ஆளுமை சான்ற இளைஞனாக உலவவிடப்பட்டுள்ளான்.
பெரியோரை/ உறவினரை /நண்பர்களைத் துணைக்கோடல்:
தன் எதிரியான கட்டியங்காரனை
முறியடித்து ஆட்சியை மீட்க, சீவகன் சமூக உறவுகளைச் செவ்வனே பயன்படுத்திக்கொண்டதை
இளைஞர்கள் கருதவேண்டும். ஆசிரியர் அச்சணந்தியிடம் கல்வியையும்
போர் முறைகளையும் கற்றுக்கொண்டதோடு, தனது தாயான விசயையின் அறிவுரைப்படி
மாமன் கோவிந்தராசன் உதவியுடன் ஆட்சியை மீட்டதும்; நந்தட்டன்,
நபுலன், விபுலன், சீதத்தன்,
புத்திசேனன், பதுமுகன், தேவதத்தன்
என்னும் நண்பர்களால் பலனடைந்ததும் இளைஞர்களுக்கு வழிகாட்டுகின்ற பண்புகளாகும்.
இளையோரின் நட்பாடல் நலம்பயப்பதாக அமையவேண்டும் என்னும் ஆளுமைக் கொள்கையும்
உளங்கொளத்தக்கதாகும்.
கலைத் திறன்:
வெள்ளிமலை வித்தியாதர அரசன் கலுழவேகன், தன்மகள் காந்தருவ தத்தையை யாழ் இசைப்போட்டியில் வெல்வார்க்கு மணஞ்செய்து கொடுப்பதாக அறிவிக்கிறான். சீவகன் யாழிசைப் போட்டியில் வென்று அவளை மணக்கிறான்.
இளவேனில் காலத்தில் பொழில் விளையாடச் சென்ற தோழியர் குணமாலை, சுரமஞ்சரி ஆகியோருக்கு
இடையே சுண்ணப் போட்டி ஏற்படுகிறது. யார் இடித்த சுண்ணம் சிறந்தது என்பதே இங்குப்
பிரச்சினை; இப்பிரச்சினை பலரால் தீர்க்கப்படாதிருக்க,
சீவகனிடம் காட்டுகின்றனர். அவன் இருவரின் சுண்ணத்தை எடுத்து வானிலே
வீச, குணமாலையின் சுண்ணத்தை வண்டுகள் உண்ணக் கண்டு, அதுவே சிறந்தது என்கிறான்
விளையாட்டுத் திறன் :
விமலை, மான்போலும் மருளும்
நோக்குடைய கண்களை உடையவள். தேவமகளைப் போன்ற அழகுடையவள். பால் போலும் இனிய மொழி
பேசுபவள். பெண்மைக்கு அழகுதரும் நீங்காத நிறங்கொண்டவள். மார்பிலே மந்தார மாலையினை
அணிந்தவள். ஒரே நேரத்தில் ஐந்து பந்துகளை விடாமல் பந்தடிக்கும் திறனுடையவள்.
மானொடு மழைக்க ணோக்கி வானவர் மகளு
மொப்பாள் பானெடுந் தீஞ்சொ லாளோர் பாவைபந் தாடு கின்றாள் (பாடல் - 63)
மலை தன்னுடைய அழகிய கைகளிலே ஐந்து
பந்துகளைக் கொண்டு ஆடினாள்.
1) மேலே எழும்பியும் முறை தவறிக் கீழே
விழுதலின்றியும் ஓடுகின்ற பந்து, கூடச் சென்று ஆடும் போது
மாலைகளுக்குள் சென்று மறைந்த பந்து கைகளுக்கு வந்து சேரும்.
2) கருங் கூந்தலுக்குப் பின்புறம் சென்று
மறைந்த பந்து, அழகுடைய முகத்தின் முன்னே வரும்.
3) தலைக்கு மேலே சென்ற பந்து, மார்பில் அணிந்த மாலைக்கு நேரே வந்து சேரும்.
4) இன்னும் தலை மாலைக்கு மேலே உயரப் போன
பந்து, கை விரல்களுக்கு இடையிலும் வந்து சேரும்.
5) இடையில் மாலை தொடுத்தும், குங்குமம் அணிந்தும் படிப்படியாக உயரும்படி பந்தினை அடித்தும், தன்னைச் சுற்றி வட்டமாக வரும்படி பந்தினை எறிந்தும் மயில் போலப்
பொங்கியும், வண்டும் தும்பியும் தேன் உண்ணாமல் பாட, வலிமையோடு பந்தாடினாள் விமலை.
அங்கை யந்த லத்த கத்த ஐந்து பந்த மர்ந்தவை
மங்கை யாட மாலை சூழும் வண்டு போல வந்துடன் (பாடல் - 65)
உடல் வலிமை:
கட்டியங்காரனின்
பட்டத்து யானை அசனிவேகம் மதம் கொண்டு, குணமாலையைக் கொல்ல முற்பட, சீவகன் யானையை அடக்கிக் குணமாலையைக் காக்கிறான்.
இவ்வாறாக, காப்பியம் முழுவதும் இளைஞர் வளக் கருத்துகள் புதைந்து
கிடக்கின்றன. இவற்றை உணர்த்தியும் தெளிந்தும் வளம்பெற வாய்ப்புள்ளது.
நன்றி: இணையத் தரவுகள் ******
Comments
Post a Comment