வள்ளுவத்தில் ‘ஞாட்பு’ – சூழற் கருத்தாய்வு
புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
தமிழுக்கும் தமிழருக்கும்
பெருமையை உலகளவில் ஈட்டித் தருகின்ற வள்ளுவம் பழந்தமிழ்ச் சொற்களைச் செவ்வனே பயன்படுத்திக்கொண்டுள்ளது.
இவற்றின் பொருள் எளிதில் புரியாமல், அறிதலில் இடைவெளி
ஏற்படுகின்றது. இதனால் குறட்பாக்களைப் பயில்கையிலும் கற்பிக்கும்போதும்
அரிய / இக் காலத்தில் வழக்கிறந்த சொற்களை, உரையாசிரியர்களைப் போல விளக்கித் தெளிவிக்கவேண்டும்.
ஞாட்பு என்னும்
பெயர்ச் சொல்லின் பொருளை விதந்து விளக்காமல், இயல்பாகக்
கற்போரால் அறியமுடியாது.
ஒண்ணுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும்
உட்கும் என் பீடு
(1088)
என்னும் குறட்பாவில்
மட்டும் ஞாட்பு என்னும் பழந்தமிழ்ப் பெயர்ச் சொல் போர்க்களம் என்கின்ற
கருத்தில் ஆளப்பட்டுள்ளது. போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்குக் காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய
நெற்றிக்குத் தோற்று அழிந்ததே [ மு.வ.]
என்பது இக் குறட்பாவின் கருத்தாகும்.
ஞால், ஞாண் போன்ற வேர்ச்சொற்கள் கூட்டம்/ இணைப்பு என்று பொருள்பயப்பவை [ஒப்புக: ஞாலம் : அரைஞாண்}. இதன் அடிப்படையில்
ஆக்கப்பட்ட ஞாட்பு என்னும் பெயர்ச்சொல் பொருள் நீட்சியாக, இவண் வீரர் கூடிப் போர்புரிகின்ற போர்முனையைச் சுட்டுகின்றது.
மேலும் நண்ணார்[பகைவர்] என்னும்
தொடர் அண்மைச் சொல்லால் , எதிரிகளோடு போர் நிகழ்த்துகின்ற போர்முனையைச்
சுட்டுவதைச் சூழலால் அறியலாம். இவ்வாறே பிற அரிய சொற்களையும்
தெளியலாம்.
ஒரு குறட்பாவின் விழுமியத்தை இடைவெளியின்றித் தெளியச் சொற்பொருளையும் கருத்தையும்
சூழல் நோக்கித் தெளியவேண்டும். இதற்கு உரையாசிரியர்கள் வாய்ப்பாகின்றனர்.
இப் பொருண்மை தெளி முயற்சி நூற் கருத்தை மனத்து நிறுத்தும் .
முயன்றால் வெல்லலாம்.
நன்றி
: இணையத் தரவுகள்
******************
Comments
Post a Comment