கையாறு –உணர்ச்சிப் பொருண்மை

                                                புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

தொல்காப்பியம் இலக்கண, இலக்கியக் கொள்கைகளைக் கலைச்சொற்களால் வகுத்துரைக்கின்றது. முந்து நூல் கண்டு, செய்யுள்/ வழக்குத் தரவுகளை ஆய்ந்து, விளக்கவியல் பனுவலாக முறைப்படி ஆக்கப்பட்டுள்ளது. இவ் இலக்கண நூலின் ஒவ்வொரு சொல்லையும் நோக்கிக் கருத்துணர்ந்தால் தமிழியலைத் தெளியலாம்.

சொற்கள் கருத்தை உணர்த்துவதால், துறைச்சொற்களை நுணுகிக் கருத்துணரவேண்டும். அம் முறையில் இலக்கிய/ நாடக உணர்ச்சிகளை எடுத்துரைக்கின்ற மெய்ப்பாட்டியலில் இயல்கின்ற உளவியல் கலைச்சொற்கள் பொருண்மைச் செறிவானவை.

இவண் மெய்ப்பாட்டியலின் ” ஆங்கவை ஒருபாலாக….” என்று தொடங்கும் 12ஆம் நுற்பாவில் பயில்கின்ற “கையாறு” என்னும் இலக்கிய உணர்வியல் கலைச்சொல்லின் நுட்பப் பொருள் உறழ்ந்து விளக்கப்படுகின்றது. தொல்காப்பியத்தில் கைகோள், கையறுதல், கையாறு, கைக்கொள்ளல், கைம்மிகல் போன்ற ஒப்பொலிச் சொற்கள் ஆளப்பட்டுள்ளன.

          இளம்பூரணர் இந் நூற்பா உரை விளக்கத்தில், கையாறு, இடுக்கண் ஆகிய சொற்களின் கருத்தை உறழ்ந்து, ”இவ் இரண்டு சொற்களுக்கும் வேறுபாடு என்னையெனின், கையாறு என்பது இன்பம் பெறாமையின் வருந்துன்பம்; இடுக்கணாவது துன்பமாயின வந்துறுதல்” என்றும் “கையாறு என்பது மனத்தின்கண் நிகழ்வதோர் மெய்ப்பாடு; இடுக்கண் என்பது மெய்யானும் தோற்றுவதோர்  மெய்ப்பாடு” என்றும் விளக்கியுள்ளார். அதாவது கிட்டாமைக்கு / இல்லாமைக்கு மனத்தால் வருந்துவதும், வந்த பல்வகைத் துன்பங்களுக்காக உடலில் புறத்தார்க்குத் தெரியுமாறு வருத்தத்தை வெளிப்படுத்தலும் ஆகும். இங்கு உடல் மொழிக் கொள்கைகளை ஒப்பல் தகும்.

        இங்ஙனம் உரை விளக்கங்கள் கலைச்சொற்களைத் தெளிய வாய்ப்பாகின்றன. இவற்றைப் பயன்கொண்டு தமிழியல் கொள்கைகளை நுட்பமாத் தெளியலாம்.

நன்றி : இணையத் தரவுகள்.                             *******

      

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு