திருக்குறளில் பாராட்டு- கருத்தாய்வு
புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
திருக்குறளின் சீர்மைகளுள் அதன் சொல்லாட்சியும் நடைச் செம்மையும் குறிப்பிடத்தக்கன. எழுத்துகளின் முறையான சேர்க்கையால் சொல்லும், சொற்களின் இலக்கண/ பொருண்மை/ பண்பாட்டுப் பொருத்தமுடைய தொடர்ச்சியால் சொற்றொடரும் ஆக்கப்படுகின்றன. இந்தத் தளத்தில் திறமையுடன் இயங்குகின்ற பாவலர் பெருமையுடன் நிலைக்க, அவரது பனுவலும் போற்றப்படுகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்ற வள்ளுவத்தில் பழந்தமிழ்ச் சொற்களைத் திருவள்ளுவர் செவ்வனே ஆண்டு இறவாப் புகழ் பெற்றுள்ளார். அவற்றுள் பாராட்டு என்னும் செயப்படுபொருள்குன்றா வினைச்சொல்லும் ஒன்றாகும். இது பெயராகவும் இயலும். இதனோடு உண்டாட்டு, தாலாட்டு, சீராட்டு, நீராட்டு, கொண்டாட்டம் ஆகியன ஒப்பத்தக்கன. பொது வழக்கில் ஒருவரது / ஒன்றின் மேன்மையை/ வெற்றியைப் புகழ்வதாகப் பாராட்டு இயலும். ஒரு செயல் செய்ய முனைவாரை வாழ்த்துவதும் வெற்றியாளரைப் பாராட்டுவதும் மரபு என்பதைத் தொல்காப்பியத்தாலும் சங்க இலக்கியங்களாலும் அறியலாம். திருக்குறளில்,
பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள(521)
என்னும் குறட்பாவில் தொழிற்பெயராக, உறவைத் தொடர்தல், உறவாடல் என்னும் கருத்தில் இச் சொல் பயில்கின்றது. அடுத்து,
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு (994)
என்பதில், பண்பாளரை மக்கள் போற்றிப் புகழ்வர் ; மதிப்பர் என்று மதித்துக் கொண்டாடுதல் என்னும் கருத்தில் வினைமுற்றாக, பாராட்டு பெய்யப்பட்டுள்ளது. அடுத்து,
பயனில்சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கட் பதடி யெனல் (196)
என்னும் குறட்பாவில் நற்பயனற்ற /தேவையற்றதைத் திரும்பத் திரும்பச் சொல்லல் என்னும் கருத்தில் இச் சொல் ஆண்பால் வினையாலணையும்பெயராக, வெறுக்கத்தக்க சொல்லாடலைக் குறித்துவருகின்றது.
இவ்வாறாக, மாறுபட்ட இலக்கண வடிவங்களில் தொடர்தல், போற்றல், திரும்பச் சொல்லல் ஆகிய கருத்தில் பாராட்டு என்னும் சொல் வள்ளுவத்தில் பயில்கின்றது. அந்தந்தக் குறட்பாவின் பொருட்களன்/ சூழல் நோக்கிக் கருத்தறிந்து தெளிந்தால் நவில்கின்ற விழுமியத்தையறிந்து சிறக்கலாம். இங்ஙனம் சொற்பொருள் ஆய்வுக்கு நற்களமாகவும் வள்ளுவம் அமைகின்றது.
நன்றி; இணையத் தரவுகள் *****
Comments
Post a Comment