வள்ளுவத்தில் புலம் – ஒப்புருப் பொருண்மை
புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
இலக்கியங்கள் இன்புறுத்துவதோடு அறிவுறுத்தவும் விழைவதால் அதற்கான உத்திகளைப் பின்பற்றுகின்றன. குறிப்பாக அறப் பனுவல்கள் விழுமியங்களை விளம்புகையில் எளிமையையும் எண்ண ஈர்ப்பையும் முதன்மைப்படுத்தி, பூ, விலங்கு போன்ற காட்சிப் பொருள்களையும் தொன்மக்
கதைகளையும் குறிப்பிட்டு/ஒப்பிட்டு நவில்கின்றன. இதனால் பொருட்புலப்பாடு முழுமையடைகின்றது. வள்ளுவம் புலம் என்னும் ஒன்றன்பாற் பெயர்ச்சொல்லை இங்ஙனம் பெய்துள்ளதைக் குறிப்பிடுவதாக இக் குறிப்புரை இயல்கின்றது.
புலம் என்னும் சொல் அறிவுத் துறை, நுண்ணறிவு, விளைநிலம், திக்கு, இடம், பொறியுணர்வு, நூல் போன்ற பொருள் சுட்டுகின்ற ஒப்புருச் சொல்லாகத் தொன்றுதொட்டு இயல்கின்றது. இதைத் திருக்குறள் நுட்பமாகப்
பெய்வதைப் பின்வருகின்ற குட்பாக்களால் அறியலாம்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு
ஓம்பல் தலை (43)
என்னும் குறட்பாவில்
முதலில் தொன்ம நம்பிக்கைப்படி, இறந்த முன்னோர் தென்திசையில் இருப்பதாக,
திசை என்னும் கருத்திலும் அடுத்து இடம்
என்றும் இயல்கின்றது.
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில்
மிசைவான் புலம் (85)
என்னும் குறட்பாவில் விளை நிலம் என்னும்
கருத்தில் அமைகின்றது.
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர் (174)
என்னும் குறட்பாவில் பொறி [உணர்வு]
என்னும் கருத்தில் பயில்கின்றது.
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு (343)
என்னும் குறட்பாவில் பொறியுணர்வு என்னும்
கருத்தில் இயல்கின்றது.
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று (407)
என்னும் குறட்பாவில் நுண்ணறிவு என்னும்
கருத்தில் அமைகின்றது.
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு (716)
என்று, அறிவாளரவையைச் சுட்டுகின்றது.
இங்ஙனம் புலம் என்னும்
சொல்லைப் பல கருத்தில், பொருட்களன்/ தொடர்ப் பொருட் சூழல் அடிப்படையில், ஒப்புருச்
சொல்லாக வள்ளுவம் ஆண்டுள்ளது.
சொற்கள்
கருத்தின் அடையாளமாக / குறியீடாக நிலைப்பதால், மனித மாண்பைப் பாடுபொருளாகக் கொண்ட வள்ளுவம்
சொற்களின் பண்பறிந்து பயன்கொண்டுள்ளதால், மொழித்திறன் மேம்பாட்டுக்கும் பொருண்மை ஆய்வுக்கும்
வாய்ப்பாகின்றது.
நன்றி
: இணையத் தரவுகள் *******
Comments
Post a Comment