பல்லியாடிய- புறநானூற்று உழவியல் கலைச்சொல்

                                       புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

இலக்கியங்களால் கதை, வரலாறு, பண்பாடு, முருகியல், விழுமியங்கள், நிலைபேறுடைய மானிட மதிப்புகள் ஆகியவற்றோடு பல்துறைக் கலைச்சொற்- களையும் அறியலாகின்றது. மக்களை/ மானுடத்தை மையமிட்டுப் படைக்கப்பட்ட சங்கச் செய்யுள்களில் இவை இயல்பாகப் பயில்கின்றன. 

”வெப்புள் விளைந்த வேங்கை... என்று தொடங்குகின்ற, வேள்பாரியைக் கபிலர் பாடிய புறநானூற்றின் 120ஆம் பாவின் தொடக்கத்தில் வரகு / தினைப்புல உழவியல் விளக்கப்பட்டுள்ளது. மழை பொழிந்து ஈரமான நிலத்தைப் புழுதியாகும்படி பல முறை உழுது, வித்திட்டுக் களையைக் கருவியால் அகற்றி, விளைந்த பின்னர் அறுத்தனர் என்று படம்பிடிக்கப்பட்டுள்ளது. இதன் 04ஆம் அடியில்,

பல்லியாடிய………

என்று பெயரெச்சமாகப் பல்லியாடல் என்னும் உழவியல் கலைச்சொல் ஆளப்பட்டுள்ளது. இது வயலில் கருவியால் களையை அகற்றலைச் சுட்டுகின்றது. உ.வே.சாமிநாதர் இப் பாவின் குறிப்புரையில்

(கு - ரை.) . பல்லியாடுதல், தாளியடித்தல், ஊடடித்தலென்பன ஒரு பொருட்சொற்கள்; அது நெருங்கி முளைத்த பயிர்களை விலக்குதற்கும் வருத்தமின்றிக் களை பிடுங்குதற்குமாகக் கீழ்நோக்கியுள்ள கூரிய பல முனைகளையுடைய பலகையின் இரண்டு பக்கத்தும் மேற்புறத்திலுள்ள வளையங்களிற் கட்டிய கயிறுகளைச் சேர்த்துப் பூட்டிய நுகத்தை வாய் கட்டப்பட்டுள்ள எருதுகளின் பிடரியில் வைத்துப் பூட்டி உழச்செய்தல்.

என்று விளக்கியுள்ளார். இதனால் சங்க கால மக்கள் உழவில் மிக்கிருந்ததையும் பல கருவிகளைப் பயன்படுத்தியதையும் அறியலாம்; அதோடு இத்தகைய விவரணை வேளாண் கருவிகளை வடிவமைக்கவும் வாய்ப்பாகும். சங்கப் பாக்களின் இவ்வாறான பதிவுகளைப் பின்வந்த திருக்குறள் போன்ற இலக்கியங்களும் பயன்படுத்திக் கொண்டன. 

இத்தகைய அரிய உரை விளக்கங்களை வெளிப்படுத்தின் இலக்கியப் பொருண்மை எளிதில் தெளியலாகும்.

 நன்றி: இணையத் தரவுகள். https://www.tamilvu.org/node/154572?linkid=117140.          ******

Comments