பல்சான்றீர் !அண்மையுறுப்பு/ குறிப்புப் பொருண்மை

புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

                புறநானூறு நரிவெரூஉத்தலையாரின் 195ஆம் பா, அதிகமாக மேற்கோளாக ஆளப்படு கின்றது. இது பல்சான்றீரே! என்று தொடங்குகின்றது. பல்சான்றீர் என்னும் விளித் தொடர் கீழ்வருகின்ற இரண்டு கருத்துகளுக்கு வாய்ப்பாகின்றது:

v  ஓரிடத்தில் பல சான்றோர் வாழ்தல்

v  ஒரு சான்றோர் பல நற்குணங்களில் நிறைந்திருத்தல்

இதனை அண்மையுறுப்பு ஆய்வு, அதாவது ஒரு தொடர்ப் பொருண்மையில் முன்பின் இயல்கின்ற உறுப்புச் சொல்லினால் கருத்தறிதல் என்னும் தொடரியல் அணுகுமுறையில் நோக்கலாம். ஆயினும் பாவின் முழுமையையும் கருதியே கருத்தறியவேண்டும். இம் முறையில் ,

Ø  பல சான்றீர் என்னும் புணர்ச்சியில் பலவின் ஈற்று அகரம் கெட்டு ‘ பல்’ என்றானது.

Ø  இப் பாவில் உலகின் நிலையாமை; இறப்பு ஆகியன உறுதிப்படுத்தப்படுகின்றன.

Ø  பல்சான்றீரே! என்று, விழிப்புணர்வில்லாதோரை இகழ்ச்சிக் குறிப்பாக விளிக்கின்றது.

Ø  இப் பாவின் கருத்தைச் சொற்களால் மட்டுமன்றிப் பேசுபவனின் உரைக் குறிப்பால் உணரவேண்டும்.

Ø  நல்லது செய்வீர்; தீமை செய்யாதீர் என்னும் விழுமியத்தை, புகழீட்டு நெறியை, அறவியலை வலியுறுத்துகின்றது.

Ø  நீண்டகாலம் வீணே கழித்துவிட்டீர் என்று ஏளனிக்கின்றது.

சீரிய உளச்செம்மையை நடைமுறைப்படுத்த வலியுறுத்துகின்ற இப் பாவில், பல்சான்றீர் என்னும் இகழ்ச்சி விளி  பல நற்குணங்களைப் பெற்றிருக்கவேண்டிய மூத்தோர் விழிப்புணர்வின்றி வீணே மூப்பதை நகையாடுகின்றது. இளையோருக்கு வழிகாட்டியாக, முன்னோடியாக இல்லாமல் வீணே உண்டு களித்திருப்போரை வினவிக் குறிப்பாக இகழ்வதாகத் தொன்மவியல், அறவியல் நோக்கில் கருத்துரைக்கின்றது. இக் கருத்தின் அடிப்படையில் பல என்னும் பன்மைப் பெயரடை குணங்களை இளிவரல் நோக்கில் குறிப்பதாக ஏற்கலாம்.

        நன்றி : இணையத் தரவுகள்                                             *****

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு