மகுளி – ஒப்புருப் பொருண்மை
புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
இலக்கியங்கள் மொழித் தொழில்நுட்பத்துடன் இயற்றப்படுவதால், இலக்கியத்தில் இயல்கின்ற ஒவ்வொரு சொல்லையும் சூழல் நோக்கிக் கருத்துணர்ந்து தெளியவேண்டும். அம் முறையில் சங்க இலக்கியங்களில் மகுளி என்னும் ஒப்புருப் பெயர்ச் சொல் பயிலுமாற்றை வெளிப்படுத்துவதாக இக் குறிப்புரை இயல்கின்றது.
உழவர் எள் விதைத்து நோய் தாக்காமல் காப்பதைப் பாராட்டுகின்ற கபிலர் மலைபடுகடாமில்,
மகுளி பாயாது………(அடி 103)
என்று பூச்சி தாக்காமல் பயிர் முதிர்வதைச் சுட்டுகின்றார். இவண் நோய் என்னும் கருத்தில் மகுளி பயில்கின்றது. அடுத்து, பரிபாடலின் 12ஆம் பாடலில்,
மத்தரி தடாரி தண்ணுமை மகுளி ( அடி41)
என்று இசைக் கருவி என்னும் கருத்தில் மகுளி இயல்கின்றது. இவற்றுடன் அகநானூற்றின் 19ஆம் பாவில்,
துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் (அடி 04 )
என்று உடுக்கையின் ஓசை என்னும் கருத்தைக் குறிக்கின்றது.
இங்ஙனம் நோய், இசைக் கருவி, ஓசை என்றவாறு பொருட்பன்மையில் மகுளி என்னும் ஒன்றன்பால்ப் பெயர்ச்சொல் இயல்கின்றது. இணைய அகராதிகளில் மகுளிக்கு, நோய், ஓசை என்று பொருளுரைத்துள்ளனர். இவற்றோடு இசைக் கருவி என்பதையும் சேர்க்கலாம்.
இத்தகைய ஒப்புருச் சொற்களைச் சூழல், தொடர்ப் பொருண்மை நோக்கி அறிவதோடு, உறுதிப்படுத்தவும் வேண்டும். தமிழின் சொல்/ பொருண்மை வளம் சீரியது என்பதை இவை வெளிப்படுத்துகின்றன.
நன்றி: இணைய அகராதித் தரவுகள் ******
Comments
Post a Comment