எழில் நலம் – கருத்தாய்வு

புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

                மனித ஆற்றலும் ஆளுமையும் போற்றத்தக்கனவாக அமைகின்றன. இவை கல்வியறிவோடும் செயல்திறனோடும் இயையும்போது மேலும் சிறப்படைகின்றன. மானுட மேன்மைக்கான கொள்கை வரைவான திருக்குறளின் கல்லாமை அதிகாரத்தில் இக் கருத்து வலியுறுத்தப்படுகின்றது. சான்றாக,

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று ( குறட்பா 407 )

என்னும் குறட்பாவில் ஒன்றை நோக்கி ஆராயவல்ல கல்வியறிவும் அதனால் உண்டாகின்ற திறனும் இலாதவனின் சமூகப் பயனின்மை உணர்த்தப்படுகின்றது. அப்போது வலிமையான பருத்த உடல் தோற்றம் பொய்யானது; துணிக்கடைப் பொம்மை போன்று இயங்க இயலாதது என்னும் உவமையால் தெளிவிக்கப்படுகின்றது.

   காண்பாரைக் கவர்கின்ற வளமையான உடல் தோற்றம் குறித்துத் தொல்காப்பியம்,

           கற்பும் ஏரும் எழிலும என்றா ( பொருளியல், நூற்பா 53 அடி 02)

என்று சுட்டுகின்றது. புறநானூறு 13 ஆம் பாடலின் 03ஆம் அடி,

                எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பு

என்று அமைந்துள்ளது. இவ் அடியிலும் பரந்துயர்ந்த வீரனின் மார்பு என்னும் கருத்தில் இச் சொல் பயில்கின்றது. எனவே ஆளும் வளரணும்; சீரிய கல்வியால் அறிவும் வளரணும்.

          இங்ஙனம் தமிழ்ப் இலக்கியப் பொருண்மை மரபில் பரந்து விரிந்த மார்பு / உடல் என்னும் கருத்திலும் எழில் ஆளப்படுகின்றது. ஆனால் மேம்போக்காகப் பார்க்கின் இது அழகை மட்டும் சுட்டுவதாகத் தோன்றும். பொருண்மை விழிப்புணர்வோடு அணுகின் தெளிவு வாய்ப்பாகி, இலக்கியக் கருத்தும் விழுமியமும் தெளிவாக வாய்க்கும்.

  நன்றி : இணையத் தரவுகள்                  ********

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு