பொதுப் பெயரைச் சிறப்புப் பெயராக்கல் – புறநானூற்றுப் பதிவுகள்
புதுச்சேரி
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
ஒட்டுமொழியான
தமிழில் வேர்ச்சொல்லுடன் பேசு+கிறு+ஆன் என்றவாறு பின்னொட்டுகளை முறையாக ஒட்டிச் சொற்களை
ஆக்குகின்றோம். இதைப் பகுபத உறுப்புகள்/ பொருண்மைக் கூறுகள் என்று குறிப்பர். அடுத்து,
சொற்களைத் தேர்ந்து இலக்கணம், பொருண்மை, பண்பாடு ஆகிய கட்டுப்பாடுகளை நோக்கித் தொடர்கள்
ஆக்கப்படுகின்றன. அப்போது தொடர்ப் பொருண்மைச் சூழலுக்கேற்ப உடன்பாட்டு/ எதிர்மறையில்
தொடர்கள் இயல்கின்றன. இதற்கேற்பச் சொற்கள் பெய்யப்படுகின்றன. சான்றாக,
வள்ளல் பரிசு வழங்கினார்
/ வழங்கவில்லை
என்னும் பதிவைக் கருதலாம்.
இதோடு மரம் என்னும் பொதுச்சொல்லோடு தென்னை
என்னும் சிறப்புச் சொல்லை இணைத்துத் தெளிவாக்கலாம். இதை இருபெயரொட்டுப் பண்புத் தொகை
என்று இலக்கணப்படுத்துவர்.
அடுத்துப் பலபொருள் ஒரு சொல்லை அது ஏற்கின்ற வினையால்
அறியலாம். சான்று: மா என்னும் பலபொருள் ஒப்புருச் சொல்லைத் தொடராக்கி,
மா பூத்திருக்கின்றது = மா மரம்
மா கன்று ஈனும் = விலங்கு
என்றவாறு தெளியலாம். மற்றும் இத்தகைய ஒப்புருச் சொல்லுக்கு
முன்னர் பொருத்தமான சொல்லை அமைத்தும் கருத்தறியலாம். சான்று:
பொலந்தார், வாழைத் தார்
என்னும் தொடர்களில் பொன்னைச் சுட்டுகின்ற பொலம் என்னும் சொல்லால் தார்
என்பது மாலை என்பதும் வாழையுடன் சேரும்போது
வாழைப்பழத் தாரைச் சுட்டுவதும் தெளியப்படுகின்றது.
இவண்
தொல்காப்பியம் கிளவியாக்கம் விளக்குகின்ற வினைவேறுபடும் பலபொருளொருசொல் (நூற்பாக்கள் 535-539) என்னும் கருத்தாக்கத்தைக்
கருதலாம்.
புறநானூற்றின்
32ஆம் பாடலின் இரண்டாம் அடியில் கோவூர் கிழார் கருவூரை வஞ்சி என்னும் பெயரால் சுட்டி,
இது தாவரத்தையும் குறிப்பதைக் கருதி, “பூவா” என்னும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தை
முன்னால் இணைத்து, ”பூவா வஞ்சி” என்னும் தொடரால்
வஞ்சிக் கொடியைக் கருதாமல், வஞ்சி என்னும் கருவூரை அறிய வாய்ப்பளித்துள்ளார்.
இங்ஙனம்
பலபொருள் சுட்டுகின்ற சொல்லுக்கு முன்னால் பண்பைக் குறிக்கின்ற சொல்லைப் பெய்து, சிறப்புப்
பெயராக்கி அதன் பொருளைச் செவ்வனே அறியச்செய்யலாம். எனவே செய்யுளைக் கற்கையில் இத்தகைய
பொருண்மை நுட்பத்தை நோக்கித் தெளிதல் கற்போர் கடனாகும். இந்த அமைப்பு தமிழ்ப் பொருண்மை
நுட்பத்தின் சீர்மைகளுள் ஒன்றாகும்.
நன்றி:
இணையத் தரவுகள் ******
Comments
Post a Comment