புறநானூறு - ஓரடியில் இருவேறு முந்நீர்- பொருண்மை விழிப்புணர்வு
புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
தமிழ் மொழியின் சொற்களஞ்சியம் ஆழமானது; பரந்து விரிந்தது. இந்தப் பெருவளத்தைப் பாவலோர் வாய்ப்பாக்கி, மொழித்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகப் பேரிலக்கியச் சீர்மையுடன் இலக்கியப் படைப்புகளை அறிவுக்கு விருந்தாகுமாறு செவிநுகர் கனிகளாக வடித்துள்ளனர். அதனால் பொருண்மை/ முருகியல் விழிப்புணர்வுடன் இலக்கியத்தில் இயல்கின்ற சொற்களையும் தொடர்களையும் சூழல் கருதித் தெளிய, இலக்கிய இன்பமும் ஆற்றலும் வெளிப்படும்.. அம் முறையில் புறநானூற்றின் 24ஆம் பாவின் 16ஆம் அடியை அணுகலாம்.
தீம்நீரோடு உடன் விராஅய்
முந்நீருண்டு முந்நீர்ப் பாயும் ( அடிகள் 15,16)
என்னும் அடிகளில் இளம் பெண்கள் பனங்கள், கரும்புப் பால், இளநீர் ஆகிய மூன்றையும் கலந்த இன்சுவை முந்நீரைப் பருகிக் கடலில் நீராடிக் களித்தனர் என்று இயற்கை வளமும் மக்களின் மன நிறைவும் செறிந்த செழிப்பு எடுத்துரைக்கப்படுகின்றது. இவண் ஓரடியில் மூன்று இன்னீர் கலந்த தீம்நீரை முந்நீர் [ மூன்று +நீர் ] என்றும் , அடுத்துக் காரணப் பெயராகக் கடலைச் சுட்டியும் மாங்குடிகிழார் நுட்பமாக ஆண்டுள்ளார்.
இத்தகைய அரிய / சீரிய / புலமைத் திறன் மிக்க பதிவுகளைத் தெளிந்து கற்கின் இலக்கிய மேன்மை புலப்பட்டு முருகியல் வாய்க்கும்.
நன்றி: இணையத் தரவுகள் ***
Comments
Post a Comment