’அல்ல கூற்று மொழி ’ (உடல் மொழி )– எண்ண வெளியீட்டு முறை
புதுச்சேரி
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
அறிவுத் திருக்கோவிலாக
/ பண்பாட்டுப் பாதுகாவலனாக / மொழித்திறன் மேம்பாட்டுப்
பாட நூலாக/ விளக்கவியல் ஆய்வுச் சுரங்கமாகத் தொல்காப்பியம் திகழ்கின்றது.
தொல்காப்பிய இலக்கண/ இலக்கியக் கொள்கைகள் உலக மதிப்பும்
பொருத்தப்பாடும் நிறைந்தவை. தொல்காப்பியத்தில் இடம்பெறுகின்ற
கலைச்சொற்கள் நுட்பமானவை ; தன்விளக்கமுடையவை, ஒவ்வொரு கலைச்சொல்லையும் சூழலுக்கேற்பக் கருத்துணர்ந்தால் புரிதிறன் வாய்த்து
நவில் கொள்கைகள் தெளிவாகும். அம் முறையில் களவியலில் உடல் மொழியைக்
குறிக்கப் பயில்கின்ற ’அல்ல கூற்று மொழி ’ என்னும் கலைச்சொல்லைக் கருத்து வெளியீட்டு நோக்கில் விளக்குவதாக இக் குறிப்புரை
இயல்கின்றது.
அகப் பாடல்களின் எண்ண வெளியீட்டு மரபு:
குறிக்கோள் பாங்கினவான அகப் பாடல்கள் அனைத்தும் கதைமாந்தர் கூற்றாகவே அமைகின்றன;
அதாவது பாடலில் பயில்கின்ற ‘நான், நீ’ என்னும் சொற்கள் ஆசிரியரைச் சுட்டமாட்டா;
ஒரு கதைமாந்தரையே குறிக்கும். இதைத் தொல்காப்பியர்
களவில் / கற்பில் கூற்றுக்கு உரியார்/ பேசும்
சூழ்நிலை என்று எடுத்துரைத்துள்ளார். ஒரு கருத்தை வெளிப்படையாகவும்
குறிப்பாகவும் வெளிப்படுத்துவதுண்டு. மேலும் பேச்சால் அல்லாமல்
கண், கை, முகம், கால்,
பொருட்கள் போன்றவற்றின் அசைவாலும் பாவனையாலும் உணர்த்துவதோடு,
படங்கள்/ நிறங்கள் மூலமாகவும் வெளிப்படுத்துவதுண்டு.
இம் முறை பழந் தமிழகத்திலும் இருந்ததைத் தொல்காப்பியமும் இலக்கியங்களும்
விளக்குகின்றன. அவற்றுள் காதல் உளவியலை வகுத்துரைக்கின்ற களவியலில்
தலைவியின் எண்ண வெளியீட்டு மரபை விளக்கும்போது,
சொல் எதிர் மொழிதல் அருமைத்து ஆகலின்
அல்ல கூற்று மொழி அவள் வயினான ( தொல்காப்பியம் -நூற்பா1056 )
என்னும் நூற்பாவில்,
தலைவி நாணத்தால் சொல்லாடாமல், உடலசைவால் எண்ணத்தை
வெளிப்படுத்துவாள் என்று உடல் மொழிக் கருத்தாடலைச் சுட்டியுள்ளார். இவ்வாறு மொழி, இலக்கியக் கொள்கைகளோடு பல துறைக் கருத்துகளின்
சுரங்கமாகத் தொல்காப்பியம் இயவது பெருமைக்குரியது. மேலும் பழந்தமிழரின்
எண்ண வெளியீட்டு மேன்மையும் புலப்படும்
நன்றி
: இணையத் தரவுகள் *******
Comments
Post a Comment