செயலை என்னும் அசோகு: கருத்தாய்வு
புதுச்சேரி
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
உயர்தனிச் செம்மொழியான தமிழின் சொற்களஞ்சியம்
நுட்பமானது. அதனால் ஒவ்வொரு சொல்லையும் சூழல் நோக்கிக் கருத்தறியவேண்டும். சான்றாக,
அடி, கடி, பூ போன்ற சொற்கள் பெயராகவும் வினையாகவும்; மா என்னும் சொல் பெயராகவும் உரியாகவும்
பொருட் பன்மையில் இயல்வதைக் கருதலாம். எனவே ஒரு தொடரில் ஒரு சொல் பயிலுமாற்றை நோக்கிக்
கருத்தறியலாம். இக் குறிப்புரை *செயலை* என்னும் பெயர்ச்சொல் அசோக மரத்தைச்
சுட்டிப் பழந்தமிழில் பயில்வதை எடுத்துரைக்கின்றது.
செயல்+ ஐ> செயலைச் செய் என்று தொடராக இக்காலத் தமிழில் ஆளப்படுகின்றது. பழந்தமிழில் செயலை என்னும் பெயர்ச்சொல் அசோக மரத்தைச் சுட்டுகின்றது. திருமுருகாற்றுப்படையின் 207ஆம் அடியில் “செயலைத் தண் தளிர்” என்று அசோகு என்னும் கருத்தில் இச் சொல் இயல்கின்றது. இவ்வாறே அகநானூற்றின் 07ஆம் பாவின் 19ஆம் அடியிலும்,188ஆம் பாவின் 12ஆம் அடியிலும்; கார் நாற்பதின் 16ஆம் பாடலின் 03ஆம் அடியிலும், திணைமாலை நூற்றைம்பதின் 02ஆம் பாவின் முதலடியிலும், சிலப்பதிகாரம் குன்றக் குரவை காதையின் 15ஆம் பாடலிலும் செயலை என்னும் பெயர்ச்சொல் அசோக மரத்தைச் சுட்டுவதாக இயல்கின்றது. மேலும் சில பாக்களிலும் இப் பதிவைக் காணவியலும்.
அசோக மரத்தின் அடிப் பாகமும் தளிரும் ஒளிர்வதாக, செந் நிறத்தில் இருந்தன; தளிரைக் காதணியாகவும் இடையாடையாகவும் அணிந்தனர் ஆகிய மரவியல் /பண்பாட்டுச் செய்திகளையும் இப் பாடலடிகளால் அறியலாகின்றது. மேலும் சிவப்பான எருதைச் செவலை என்று மக்கள் அழைப்பதையும் இவண் ஒப்பலாம். இங்ஙனம் ஒவ்வொரு சொல்லையும் நோக்கிக் கருத்தறிந்தால் இலக்கியப் பொருண்மை தெளிவாகும்.நன்றி: இணையத் தரவுகள் ***********
Comments
Post a Comment